பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பங்குச்சந்தை வர்த்தகர் பிஆர் சுந்தரை சென்னை போலீசார் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட அந்த புகாரில், பிஆர் சுந்தர் தன்னை பாலியல் தொல்லை செய்ததுடன், சட்டவிரோதமாக அடைத்து வைத்து மிரட்டியதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில், பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் பிஆர் சுந்தர் தலைமறைவானதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து, எக்ஸ் வலைதளத்தில் பிஆர் சுந்தர் அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழக போலீசின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் எஸ்பியாக பணியாற்றும் அன்புச்செழியன் மீது குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்திருந்தார்.
பின்னர் பெங்களூருவில் மறைந்திருந்த பிஆர் சுந்தரை கண்டறிந்து கைது செய்ததாக சென்னை போலீசார் தெரிவித்தனர்.





