முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜயுடன் நேரடியாக பேச்சு நடத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக கேரள முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார்.
தமிழகம்–கேரளா எல்லையோரம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. 1885ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் பராமரிப்பு தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நூற்றாண்டு பழமையான அணையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து வரும் கேரளா, நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தற்போதைய அணைக்கு அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகிறது.
தமிழகம் மற்றும் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சதீசன், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், முதல்வர்கள் மட்டத்திலான பேச்சு நடத்துவது மற்றும் அதற்காக தமிழக முதல்வர் விஜயை சந்திப்பது ஆகியவை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.





