புதுடில்லி: மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை கையாளும் போது போலீசாரும் அதிவிரைவு படையினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்; ஆக்ரோஷமாக அணுகுவது நிலைமையை மேலும் தீவிரப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, டில்லி மற்றும் பிற மாநிலங்களில் மாணவர் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான மனுக்களை நேற்று விசாரித்தது. டில்லியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” காரணம் எனக் கூறி, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவும் இதனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனநாயக நாட்டில் அமைதியாக போராடும் உரிமை இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதே நேரத்தில் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றனர். மாணவர்கள் ஆக்ரோஷமடைந்து வன்முறைக்கு மாறாத வகையில், உயரதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் இத்தகைய போராட்டங்களை கையாள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
போலீசார் பதிலுக்கு ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றினால் நிலைமை மேலும் மோசமாகும் என நீதிமன்றம் எச்சரித்தது. மாணவர்கள் ஏன் போராடுகிறார்கள், அவர்கள் சொல்ல வருவது என்ன, கோரிக்கைகள் என்ன என்பவற்றை செவி கொடுத்து கேட்பது பிரச்னை பெரிதாகாமல் தடுக்க உதவும் என்றும், மாணவர்கள் இளம் வயதினர் என்பதால் அவர்களுக்கு வழிகாட்டல் தேவைப்படலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.





