புதியதாக தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டை குறித்து பொதுமக்களிடையே கலந்த கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், இளைஞர்கள், விவசாயிகள், இளம்பெண்கள், வயோதிகர்கள் என பல தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாக சிலர் பாராட்டினர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஓய்வு இல்லங்கள் அமைத்து மேம்பட்ட வசதிகள் வழங்கும் அறிவிப்பை சிலர் வரவேற்றனர். ஆன்மிக சுற்றுலா தொடர்பான வசதிகள், அரசுப்பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஏழை மக்களுக்கான வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளும் நல்லதாக இருப்பதாக கருத்துகள் பதிவானது.

கல்வித் துறைக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு, இளைஞர் நலன் ஆகியவற்றில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பேராசிரியர்கள் உள்ளிட்டோர் தெரிவித்தனர். அதே நேரத்தில், இலவச பஸ் பயணம் மற்றும் பைக் டாக்ஸி போன்ற சேவைகளால் தங்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஆட்டோ ஓட்டுநர், தங்களுக்கு உதவும் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார்.

விளையாட்டு துறையிலும் கவனம் ஈர்க்கும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கிராமிய விளையாட்டு போட்டிகளுக்கான ஒதுக்கீடு, ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைத்தல், 8–18 வயது பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து உலகத் தரப் பயிற்சி வழங்குதல், வீரர்களுக்கு நிதியுதவி போன்ற அறிவிப்புகள் வரவேற்பு பெற்றன. ஆனால் கிராமங்கள் தோறும் மைதானங்கள் அமைத்த பிறகே இத்தொகைகள் முழுமையாக பயன் தரும் என்றும், அழிந்து வரும் கிராமிய விளையாட்டுகளை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; கடந்த திட்டங்களுக்கு மெருகேற்றி அறிவித்துள்ளனர் என சிலர் விமர்சித்தனர். மேலும் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தல், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கல் போன்ற வாக்குறுதிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது கவலை தருவதாகவும் கருத்துகள் வந்தன. அதேசமயம் ‘தாய்மாமன் சீர்’ திட்டத்தின் கீழ் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும், நீட் விவகாரத்தில் தவறுகள் மீண்டும் நடக்கக் கூடாது என்றும் சிலர் தெரிவித்தனர்.