தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் மற்றும் பின்பற்றாத கோவில்களை கண்டறிந்து வகைப்படுத்தும் பணியை முடிக்க தமிழக அரசுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் மற்றும் உட்படாத கோவில்களை தனித்தனியாக வகைப்படுத்தி, அதன் பட்டியலை வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு ஆகஸ்ட் 5 அன்று நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கருணாகரன், ஒவ்வொரு கோவிலுக்கும் அதிகாரிகள் நேரில் சென்று ஆகம விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சரிபார்த்து வருவதாக தெரிவித்தார். இது விரிவான பணியாக இருப்பதால், வகைப்படுத்த கூடுதலாக 8 மாத அவகாசம் வழங்க வேண்டும் என அவர் கோரினார்.
ஆனால் அந்த கோரிக்கையை அமர்வு ஏற்க மறுத்து, இதற்காக 5 மாதங்கள் மட்டுமே வழங்க முடியும் என கூறி வழக்கை ஒத்திவைத்தது. கடந்த மார்ச் மாத விசாரணையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடியும் என அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதல் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





