சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில், முந்தைய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சிகளில் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித் தொகை திட்டம், “அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித் தொகை திட்டம்” என மாற்றப்பட்டு, ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் “வெற்றி தொழில் முனைவோர் திட்டம்” என பெயர் மாற்றப்பட்டு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் “மண்ணின் மகள் திட்டம்” என மாற்றப்பட்டு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்குடி திட்டம் “ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்” என பெயர் மாற்றப்பட்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பனைப்பொருள் மேம்பாட்டு வாரியம் “தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம்” என மாற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம் “வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்” என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு பின்னர் தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் “அண்ணனின் சீர்” என பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டம் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்” என மாற்றப்பட்டுள்ளது. மேலும், “பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள்” திட்டத்தின் கீழ் உண்டு-உறைவிட பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி திட்டமும்—முன்னர் “அம்மா மடிக்கணினி” மற்றும் பின்னர் “உலகம் உங்கள் கையில்” என அறியப்பட்ட திட்டம்—இப்போது “வெற்றி மடிக்கணினி திட்டம்” என பெயர் மாற்றப்பட்டுள்ளது.