மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2005 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே, மும்பையில் நடைபெறும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றும் பாணி காரணமாக, நிர்வாகங்களுடன் அவருக்கு அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அவரது 20 ஆண்டு பணிக்காலத்தில் 25 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவரை உணவுப் பாதுகாப்பு ஆணையராக நியமித்தபின், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அமலாக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து, காலை முதல் இரவு வரை ரெய்டுகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை, செல்வாக்குள்ளவர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இடங்களும் உட்பட பல இடங்களில் ஆய்வுகள் நடந்தன. விதிமுறைகளை மீறியவை, சுத்தம்-சுகாதாரத்தை பேணாதவை, லைசன்ஸ் புதுப்பிக்காதவை அல்லது கலப்படத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டவை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளால் மிரட்டல்கள் வந்தாலும், அவர் தொடர்ந்ததாக செய்தி தெரிவிக்கிறது. தனியார் நிறுவனங்களை மட்டும் குறிவைத்து ரெய்டு நடத்துவதாக வழக்கு தொடரப்பட்டபோது, நீதிபதி கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அடுத்த நாளே மும்பை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் ரெய்டு நடத்தி, லைசன்ஸ் இல்லாமல் இயங்கியதாக கண்டறிந்து, உரிமம் பெற்ற பின் மட்டுமே நடத்துமாறு மூட உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 1,300 உணவகங்கள் மற்றும் நிறுவனங்களில் ரெய்டு நடந்ததாகவும், ரூ.49 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 1.6 லட்சம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன.