காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களை முன்னிட்டு தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சாவூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிய உரை குறித்து சர்ச்சை எழுந்தது.
இந்த உரை இரட்டை அர்த்தமாக இருந்ததாகக் கூறி, த.வெ.க. மகளிரணி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் உதயநிதி மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டார். முதலில் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் விசாரிக்க திட்டமிட்ட நிலையில், அப்பகுதியில் தி.மு.க. தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்பட்டதால், அவர் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு மாற்றி அழைத்து செல்லப்பட்டார்.
விசாரணையில் இரட்டை அர்த்தத்தில் பேசியதா, கூட்ட நிபந்தனைகளை மீறியதா, தனிநபரை குறிவைத்து தாக்குதல் பேச்சு இருந்ததா உள்ளிட்ட ஐந்து முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு, ‘தனிநபர் குறித்து எதுவும் பேசவில்லை; இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை’ என உதயநிதி குறுகிய வார்த்தைகளில் பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
உதயநிதி காவல் நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்தாலும், விசாரணை அரை மணி நேரத்தில் முடிந்ததாக போலீசார் கூறினர். இந்த வழக்கு தஞ்சாவூர் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.





