இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா ஆகஸ்ட் 6 அன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சகம் தெரிவித்தது.
இந்த சோதனையில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப இலக்குகள் அனைத்தும் எட்டப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
அக்னி-4 ஏவுகணை 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டதாகும். இது திட எரிபொருளை பயன்படுத்தும் இரு நிலை, தரையிலிருந்து தரைக்கு தாக்கும் வகை ஏவுகணையாக உருவாக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அக்னி-3 ஏவுகணை சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.





