எரிபொருள் விலை உயர்வு காரணமாக தற்காலிகமாக குறைக்கப்பட்ட விமானச் சேவைகளில் பெரும்பாலானவற்றை செப்டம்பர் 1 முதல் மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எரிபொருள் செலவு அதிகரித்ததை காரணமாகக் காட்டி, பல சர்வதேச விமான சேவைகள் குறைக்கப்பட்டன. டில்லி–சிகாகோ, டில்லி–நியூவார்க், மும்பை–நியூயார்க், டில்லி–ஷாங்காய், சென்னை–சிங்கப்பூர், மும்பை–டாக்கா, டில்லி–மாலே உள்ளிட்ட 7 முக்கிய வழித்தடங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதனுடன், உள்நாட்டு விமான சேவைகளிலும் சுமார் 20% முதல் 25% வரை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வரும் குளிர்கால அட்டவணையில் சில சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. சூரிச், வியன்னா, மெல்போர்ன், டோக்கியோ மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.





