பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தற்போது விசாரித்து வரும் சி.பி.ஐ., முன்பு விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார், வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் தொடர்பில் இருந்ததாக கண்டறிந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் (52) 2024 ஜூலை 5 அன்று சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை ஆரம்பத்தில் எஸ்.ஐ.டி. விசாரித்தது. அந்த குழுவில் தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டராக இருந்த புஹாரி மற்றும் மாதவரம் இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் (33) என்பவர், தற்காப்புக்காக நடந்த ‘என்கவுன்டர்’ நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர் புஹாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அந்த இடத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனும் பணியில் இருந்ததாக தகவல் உள்ளது.

இதற்கிடையே, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர் அகில் குமார் அளித்த புகாரில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி ரூ.45 லட்சம் பறித்ததாக கூறப்பட்டதால், இந்த இரு அதிகாரிகளும் சிக்கினர். அந்த வழக்கில் பரங்கிமலை இன்ஸ்பெக்டராக இருந்த புஹாரி கைது செய்யப்பட்டார்; வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக விசாரிக்கும் போது, எஸ்.ஐ.டி.யில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சில போலீசாரின் மொபைல் போன் தொடர்புகளை ஆய்வு செய்ததாக தெரிவித்தனர். அதில், உணவுப் பொருள் டீலராக செயல்பட்ட நபர்கள் வழியாக, வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக தேடப்பட்டு வரும் ‘சம்பவம்’ செந்திலுடன் அவர்கள் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததாக கூறினர். இதுதொடர்பாக புழல் சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் புஹாரியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. தெரிவித்தது.