புதுடில்லி: சமூக ஊடகங்கள் அமெரிக்க சட்டங்களை முன்வைத்து இந்தியாவில் செயல்பட முடியாது; இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு தான் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு கடுமையாக தெரிவித்துள்ளது.
மெட்டாவின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோ நீக்கப்பட்டதாகவும், குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள் மற்றும் போலி வீடியோக்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்டாவின் கொள்கை விவகாரங்களுக்கான சர்வதேச அதிகாரி ஜோயல் கப்லான் தலைமையிலான குழு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலர் கிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகளை புதன்கிழமை சந்தித்தது. வியாழக்கிழமை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், மெட்டா குழுவினர் இன்னும் சில நாட்கள் இந்தியாவில் இருப்பார்கள்; 3 அல்லது 4 சந்திப்புகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வாட்ஸ்ஆப் தொடர்பான விவகாரங்களும் பேசப்படலாம்; மெட்டா தளங்கள் இந்திய சட்டங்களுக்கு ஏற்ப செயல்படுகிறதா என்பதும் ஆய்வு செய்யப்படும் என்றனர்.
சமூக நலனுக்காக சட்டத்தைப் பயன்படுத்துவதே நோக்கம் என்றும், பிற நிறுவனங்களைப் போலவே சமூக வலைதளங்களுக்கும் சமூக மற்றும் சட்டப் பொறுப்புகள் உள்ளன என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மெட்டா, எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட முக்கிய தளங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், சமீபத்திய சந்திப்பில் தொழில்நுட்ப தரவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறினர்.





