பழனி கோவில் நில விற்பனை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே பாணியில் இன்னொரு நில விற்பனை சர்ச்சை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுடன் தொடர்புடைய சொத்துகளை தனியார் அறக்கட்டளை பெயருக்கு மாற்றி விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் கூறுகையில், கோவிலுக்கு 20.47 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அதன் சந்தை மதிப்பு ரூ.600 கோடி அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார். 1905 மற்றும் 1923 ஆண்டுகளில் பாலுசாமி அய்யர் என்பவர் சித்ரா பவுர்ணமி மண்டகப்படி, திருமஞ்சனம், நிவேதனம், அன்னதானம் போன்ற தர்ம காரியங்களை நிரந்தரமாக நடத்துவதற்காக இந்த நிலத்தை கோவிலுக்கு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலங்கள் ‘குறிப்பிட்ட சமய அறக்கட்டளை’ சொத்துகள் என்பதால் வாரிசுகள் விற்க முடியாது; வாரிசுகள் இல்லையெனில் முழு நிர்வாகமும் கோவிலுக்கே சேரும் வகையில் சட்டபூர்வமாக எழுதிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், சொத்தின் உண்மை நிலையை அறிந்திருந்தும், 2024-ல் ‘பாலுசாமி அய்யர் அண்ட் பிரதர்ஸ் டிரஸ்ட்’ என்ற பெயரில் அறக்கட்டளை உருவாக்கி, இச்சொத்துகளை தங்களின் டிரஸ்ட் சொத்துகள் போல காட்டியதாக குற்றம்சாட்டினார்.
மேலும், உண்மையான பயனாளியான கோவிலும், ஹிந்து சமய அறநிலையத் துறையும் வழக்கில் சேர்க்கப்படாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் அளித்து 2025 டிசம்பர் 5-ம் தேதி விற்பனைக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதாகவும் அவர் கூறினார். இதன் பின்னர் 5.44 ஏக்கர் நிலம் மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டு பத்திரப்பதிவும் நடந்துள்ளதாகவும், உரிமை மாற்றத்தை நிரந்தரமாக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், எஸ்.பி., மாவட்ட கலெக்டர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.





