புதுடில்லி: ஆன்லைன் தளங்களில் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வடிவமைப்புகள் மற்றும் மறைமுக கட்டணங்கள் வசூலித்ததாகக் கூறி, ‘செப்டோ’, ‘புக்மைஷோ’ உள்ளிட்ட ஒன்பது டிஜிட்டல் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2020ல் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பது, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறான விளம்பரங்களைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும், பெரிய ஆன்லைன் வர்த்தக தளங்களை நேரடி விற்பனையாளர்களாகக் கருதி நுகர்வோர் உரிமை மீறல்களுக்கு பொறுப்பாக்கியும் நடவடிக்கை எடுக்கிறது.
‘டார்க் பேட்டர்ன்’ எனப்படும் நடைமுறைகளைத் தடுக்க 2023ல் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதில், பயனரை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுக்கத் தூண்டும் வடிவமைப்புகள், கட்டண விவரங்களை மறைக்கும் நடைமுறைகள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. போலியான அவசர நிலை உருவாக்குதல், பயனர் ஒப்புதல் இல்லாமல் நன்கொடை/கூடுதல் பொருட்களை கட்டண பட்டியலில் சேர்த்தல், குறைந்த விலை காட்டி பின்னர் உயர்த்துதல், இறுதிக்கட்டத்தில் கூடுதல் கட்டணங்களைச் சேர்த்தல் போன்றவை இதில் எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவை அந்த நடைமுறைகளை கைவிட்டதாகவும் ராஜ்யசபாவுக்கு மத்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் காட்டப்பட்ட விலைக்கு பின்னர் கையாளுதல் கட்டணம், சந்தா கட்டணம் சேர்க்கப்பட்டதாகக் கூறி ‘செப்டோ’க்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
‘புக்மைஷோ’ தளத்தில் ரூ.1 நன்கொடை முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டிருந்த நடைமுறையை நீக்க உத்தரவிடப்பட்டது. ‘இண்டிகோ’ செயலியில் கூடுதல் சேவையை மறுப்பவர்களுக்கு அழுத்தம் தரும் வாசகத்தை மாற்ற அறிவுறுத்தப்பட்டது. இலவச பாடங்களை அணுக தனிப்பட்ட தகவல்கள் கோரியதாக ‘பிசிக்ஸ் வாலா’ தளத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ‘பர்ஸ்ட்கிரை’, ‘பார்ம்ஈசி’, ‘ஸ்பைஸ்ஜெட்’ ஆகியவற்றுக்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.





