சென்னை: மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்து வீடு வரை கொண்டு சேர்க்கப் போகிறார்களா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘டோர் டெலிவரி’ முறைக்கு இடமில்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

பேட்டியில் அவர் கூறியதாவது: கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைப்பதும், பணம் வசூலிப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதும் தான் புதிய ஏற்பாட்டின் நோக்கம். அதன்படி, ஆன்லைனில் மதுபான வகைகளை தேர்வு செய்து பணம் செலுத்தி, பின்னர் கடைகளில் நேரில் பெற்றுக்கொள்ளும் வசதி தொடங்கப்பட உள்ளது.

பணம் செலுத்தியதற்கான கியூஆர் குறியீட்டை கடையில் காட்டினால் பொருள் வழங்கப்படும். இதன் மூலம் கூடுதலாக ரூ.10 போன்ற தொகை வசூலிக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும், சில கடைகளில் கேட்ட வகைகள் கிடைப்பதில்லை என்ற புகார்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மதுபான விற்பனை தனியார்மயமாக்கப்படாது; விலையும் உயராது என்றார். 2011 முதல் சில இடங்களில் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கும் நடைமுறை இருப்பதாக கூறிய அவர், தற்போது கூடுதலாக பணம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மதுபானங்களுக்கு வீடு வீடாக டெலிவரி அவசியமா எனவும் கேள்வி எழுப்பினார்.