நாடு முழுவதும் சுமார் 1.5 லட்சம் பேரின் மருத்துவ தரவுகள் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கசிந்ததாக கூறப்படும் விவகாரத்தில், மத்திய அரசு விரிவாக பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ‘வித்ரயா டெக்னாலஜிஸ்’ நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மருத்துவ பரிசோதனை விவரங்கள், நோய் கண்டறியப்பட்ட தகவல்கள், மருந்து சீட்டுகள், முகவரி மற்றும் தனிநபர் அடையாள எண்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகள் சிங்கப்பூரில் உள்ள சர்வருக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு மார்ச்சில் பஞ்சாப் போலீசில் புகார் அளித்தபோதும் விசாரணை போதிய தீவிரமின்றி நடைபெறுவதாகவும், எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வர், தகவல் கசிவு எப்படி, எங்கிருந்து நடந்தது, யார் பொறுப்பு என்பதைக் உடனடியாக கண்டறிய வேண்டிய தீவிரமான விவகாரம் என நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
இதையடுத்து, மத்திய அரசு விரிவான பதில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர்.





