தனியார் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், 62 வயது பங்குச்சந்தை ஆலோசகர் சுந்தரை சென்னை போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், வேலை வேண்டுமென மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டபோது சுந்தர் தன்னை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வருமாறு அழைத்ததாக பெண் தெரிவித்துள்ளார். அங்கு சென்றபோது அவர் பாலியல் ரீதியாக பேசத் தொடங்கியதாகவும், அதை பொருட்படுத்தாமல் வேலை குறித்து வலியுறுத்தி திரும்பிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவரது வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தபோது, அங்கு பாலியல் தொல்லை கொடுத்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், இதை சுந்தரின் மனைவி மங்கையற்கரசியிடம் தெரிவித்தபோதும் அவர் கண்டும் காணாதது போல இருந்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 29 அன்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி மீண்டும் அலுவலகத்திற்கு வரச் சொன்னதாகவும், அங்கு சென்றதும் சுமார் மூன்று மணி நேரம் அறையில் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததுடன், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனு ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட பின்னர், ராயப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் சுந்தர் மற்றும் மங்கையற்கரசி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சுந்தர் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.