உடல் பாதிப்புகளை தெளிவாக கண்டறிய உதவும் கருவிகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த இயந்திரங்களின் விலை பொதுவாக ரூ.8 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது 5,000-க்கும் குறைவான எம்.ஆர்.ஐ. இயந்திரங்களே பயன்பாட்டில் உள்ளன; அவையும் பெரும்பாலும் பெரிய மருத்துவமனைகளில் தான் உள்ளன. சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளுக்கு இத்தனை பெரிய முதலீடு செய்வது கடினமாக இருப்பதால், மேம்பட்ட நோயறிதல் சேவைகள் பல இடங்களில் எளிதில் கிடைக்காத நிலை உள்ளது.

இந்த சிக்கலுக்கு தீர்வாக, இந்திய பொறியாளர் அர்ஜுன் அருணாச்சலம் தனது ‘வோக்சல்கிரிட்ஸ்’ ஸ்டார்ட்அப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். மேற்கத்திய கருவிகளை விட குறைந்த செலவில் தயாரிக்க முடிவதால், ஸ்கேன் கட்டணமும் குறைய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.

இந்த முயற்சி குறித்து தகவல்கள் பரவியபோது, ஒரு பன்னாட்டு நிறுவனம் கூட்டு மற்றும் முதலீட்டுக்காக அணுகியதாகவும், கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தபோதும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அர்ஜுன் தெரிவித்தார்.

இதையடுத்து ரத்தன் டாடாவின் டாடா டிரஸ்ட் முதலில் நிதியுதவி வழங்கியதாகவும், பின்னர் ஸ்ரீதர் வேம்புவின் ஸோஹோ நிறுவனமும் ஆதரவு அளித்ததாகவும் அவர் கூறினார். இதன் மூலம் தனது நிறுவனம் பன்னாட்டு நிறுவனத்தின் பிடியில் சிக்காமல் தப்பியதாக அவர் தெரிவித்தார். புதிய கருவி மூலம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செலவு சுமார் 70% குறையும் என்றும், நாட்டின் பல பகுதிகளுக்கும் மேம்பட்ட நோயறிதல் சேவைகள் கிடைக்க உதவும் என்றும் அவர் கூறினார். மேலும் வெளிநாட்டு இயந்திரங்களில் உதிரி பாகங்கள் மற்றும் சேவை பொறியாளர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களுக்கு உள்நாட்டு தயாரிப்பு தீர்வாக அமையலாம் என மருத்துவர்கள் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.