பாங்காக்கிற்கு வடமேற்கே நோந்தபுரி அருகே உள்ள மேல்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸ் தகவலின்படி, பள்ளி வளாகத்தில் மாணவன் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். உயிரிழந்தவர்களில் 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் உள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்; அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கியை எடுத்துவந்து மாணவன் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கு முன் மாணவன் தனது வீட்டில் தாத்தா, பாட்டியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த பிப்ரவரியில் தெற்கு தாய்லாந்தில் 17 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆசிரியர் உயிரிழந்த சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது.