சென்னை: உயரதிகாரிகள் மீது வரும் புகார்கள் உட்பட, லஞ்ச குற்றச்சாட்டுகள் கிடைத்தால் அவற்றை மறைக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு துறைகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அரசின் பல துறைகளின் பிரிவு, கோட்ட, தாலுகா, மாவட்ட, மண்டல மற்றும் தலைமை அலுவலகங்களுக்கு மக்கள் சேவைகள் பெறவும், ஒப்பந்தப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களும் வருவதாக ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார். கீழ்மட்ட பணியாளர்கள் முதல் அலுவலக நிர்வாக அதிகாரிகள் வரை லஞ்ச புகார் வந்தால் பொதுவாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆனால் மாவட்ட, மண்டல அல்லது தலைமை அலுவலக அளவிலான அதிகாரிகள் மீது புகார் வந்தால் பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மாவட்ட அமைச்சர்கள், துறை அமைச்சர்களுடன் நெருக்கம் மற்றும் பரிந்துரைகளால் பதவிகளில் இருப்பது இதற்குக் காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்து மட்டங்களிலும் லஞ்சத்தை ஒழிக்க அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது வரும் புகார் கடிதங்களை மறைக்காமல் சம்பந்தப்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டு, உண்மை நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.





