மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு வழங்க வேண்டும் என தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் திமுக, அதிமுக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நிதியமைச்சர் மரிய வில்சன் தீர்மானத்தை முன்வைத்து, அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சி, சமத்துவம், நியாயம் ஆகிய கோட்பாடுகளுக்கு ஏற்ப மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்திற்கு உரிய பங்கை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகள் ஆகியவற்றை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில் மத்திய வரிகளின் பகிர்வில் வெளிப்படையான, சமமான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும், எதிர்கால ஏற்பாடுகளில் தமிழகத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசுகையில், அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார். நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வை உறுதி செய்யும் வகையில் தீர்மானத்தை மாற்ற வேண்டும் என்றும், மத்திய அரசின் பங்களிப்பு குறைவதால் தமிழக அரசின் நிதிச்சுமை அதிகரிக்கிறது என்றும் தெரிவித்தார்.