வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த அதீத இறக்குமதி வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களுக்கு பெரிய அளவில் வரி தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜனவரியில் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். பதவியேற்ற உடனே வர்த்தக பற்றாக்குறையை காரணமாகக் காட்டி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்தார்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களும் அந்நாட்டு வணிக நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இத்தகைய அதீத வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்து, வசூலிக்கப்பட்ட தொகைகளை இறக்குமதியாளர்களுக்கு திருப்பித் தர உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, வரி விதிக்கப்பட்ட காலத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.15.77 லட்சம் கோடியில் 60% ஆகும் ரூ.9.50 லட்சம் கோடி தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது. மீதமுள்ள தொகைகளுக்கான கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும், அவையும் விரைவில் திருப்பி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.