விவசாயிகள் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட அறிவுசார் வேளாண் சேவைகளை தங்கள் மொபைல் போன் வழியாக எளிதாகப் பெற உதவும் வகையில், நடப்பாண்டில் ‘உழவர் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திட்டம்’ ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வால் குறுவை சாகுபடி பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரித்த ‘மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாடு திட்டத்தை’ கலெக்டர்களுக்கு அனுப்பி, அதில் கூறப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2026–27ம் ஆண்டுக்கான உணவு உற்பத்தி இலக்கு 1.25 கோடி டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற ஊட்டச்சத்து வழங்கும் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தி தன்னிறைவை எட்டுவதும் இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கான பிற திட்டங்களிலும் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மும்முனை மின்சார சேவைக்காக மின் வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி கட்டணத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.600 கோடி மதிப்பில் ஐந்தாண்டுத் திட்டமாக தமிழ்நாடு மண் வள பாதுகாப்பு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு, மண் நல அட்டைகள், பசுந்தாள் உர விதைகள் மானிய வினியோகம், மற்றும் ஏக்கருக்கு ரூ.3,000 உழவு மானியம் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், மத்திய அரசின் நெல் விதை உற்பத்தி மானியம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு ரூ.34.72 கோடி செலவில் நெல் விதை உற்பத்தி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. பருப்பு வகைகள், உணவு எண்ணெய் வித்துகள், சிறுதானிய இயக்கம், புதிய ஊட்டச்சத்து நிறைந்த பயிர்கள் அறிமுகம், பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் மக்காச்சோளம் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.