சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு சபை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்; பின்னர் முதல்வர் விஜய் சபைக்கு வந்தார்.
முதல்வர் விஜய் நேரடியாக தனது இருக்கைக்கு செல்லாமல், சபையின் மையப்பகுதி வரை சென்று ஆளும்கட்சி வரிசையில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் வணக்கம் தெரிவித்தார்.
முன் வரிசையில் இருந்த சட்டசபை கட்சி தலைவர்கள் எழுந்து வணக்கம் தெரிவித்த நிலையில், முதல்வர் விஜய் உதயநிதி பக்கம் பார்ப்பதை தவிர்த்து தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார். இதேபோல் உதயநிதியும் முதல்வருக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை.
சபை முடிந்ததும் வேளாண்துறை அமைச்சர் வினோத் முதல்வரை சந்திக்க விரைவாக எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் முதல்வர் புறப்பட்டு சென்றார். பின்னர் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் வினோத்திற்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கிடையில், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சபை நிகழ்வுகளை பதிவு செய்த கேமராமேன்களிடம் சென்று சில விளக்கங்கள் கேட்டுவிட்டு, பின்னர் சபையிலிருந்து வெளியே சென்றார்.





