ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், நாடு முழுவதும் இளைஞர்கள் முன்னெடுக்கும் குரல் வலுப்பெற்று வருகிறது. பல மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்கள், இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த விவகாரத்தில் உருவாகியுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், அதே நேரத்தில் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கமும் சிலர் மூலம் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முன்னிலைப்படுத்தியவர்களில் ஹர்ஷ் துபே என்ற இளைஞர் குறிப்பிடப்படுகிறார். அவர் டிவி விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று, ஜாதிவாரி இடஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பொருளாதார ரீதியாக நலிந்தவர்களின் வாய்ப்புகளை பாதிக்கிறது என வாதிட்டுள்ளார்.

இந்த எதிர்ப்பு இயக்கம் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற போராட்டம் மூலம் தொடங்கி, பின்னர் உத்தரபிரதேசத்தின் லக்னோ, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், ஆந்திராவின் விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு பரவியதாக தகவல். ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனா இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தி, ஜாதி ரீதியிலான சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஊராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பின்னர் பாஜ அலுவலகம் மற்றும் முதல்வர் இல்லம் நோக்கி செல்ல திட்டமிட்டபோது போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீச்சு மூலம் கூட்டத்தை கலைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், டில்லியில் மாபெரும் போராட்டம் நடத்த ஹர்ஷ் துபே திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. மேலும், ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கப்பட்டு, அதனை 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் ஆறு கோரிக்கைகளை முன்வைக்கிறது. அதில், ஜாதி அடிப்படைக்கு பதிலாக வருவாய் அடிப்படையிலான இடஒதுக்கீடு, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே சலுகை, நிரப்பப்படாத இடஒதுக்கீட்டு இடங்களை பொதுப்பிரிவுக்கு வழங்குதல், பொருளாதார ரீதியாக வலிமையானவர்களை பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கைகள், கல்வி ஏற்றத்தாழ்வு குறையும்போது படிப்படியாக நிறுத்தும் ‘சன்செட் கிளாஸ்’ விதி, தேர்தல் கால இடஒதுக்கீட்டு வாக்குறுதிகளைத் தடுக்குதல் ஆகியவை இடம்பெறுகின்றன. எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன், பத்திரிகையாளர் அஜீத் பார்தி, எழுத்தாளரும் இயக்குநருமான அனுராதா திவாரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.