செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் காரணமாக வேலை இழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் சில ஆண்டுகளாக நிலவி வந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள், இந்தியாவில் ஏஐ பயன்பாடு வேலை இழப்பை விட வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.
டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நிதிச் சேவை மற்றும் முதலீட்டு வங்கி நிறுவனம் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க், ஆசியா முழுவதும் 2022 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலகட்டத் தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஏஐ தாக்கம் காரணமாக 31,921 பணிநீக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்தப் பணிநீக்கங்களில் பல, வாடிக்கையாளர் சேவையில் ‘சாட்பாட்’ பயன்பாடு அதிகரித்ததுடன் தொடர்புடையதாக அறிக்கை குறிப்பிடுகிறது. அதே காலகட்டத்தில், ஏஐ காரணமாக 83,100 பேருக்கு வேலைவாய்ப்பு உருவானதாகவும், நிறுவனங்கள் இதற்கு ஏஐ தான் காரணம் என்று வெளிப்படையாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் ஏஐ பயன்பாடு விரிவடைவதுடன் தொழில்நுட்பத்தில் அதிக அனுபவம் கொண்ட பணியாளர்களுக்கான தேவை உயர்ந்து வருவதாக நோமுரா தெரிவித்துள்ளது. பெரிய பொருளாதார நாடுகளிலும், தொழிலாளர் சந்தை முக்கியப் பங்கு வகிக்கும் பிலிப்பைன்ஸிலும் இதே போக்கு தெளிவாக காணப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.





