மத்திய அரசு செயல்படுத்தவிருக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில், இது குறித்து ஆலோசிக்க சென்னையில் அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு, காவிரி விவகாரம் தொடர்பாகவும் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என திமுக நிபந்தனை வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. அதிமுகவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடந்த கூட்டத்தில், முதல்வரின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மதிமுக ஆகியவற்றைச் சேர்ந்த ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்பிக்கள் சேர்த்து 19 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் வெங்கடேசன், சச்சிதானந்தம்; இந்திய கம்யூனிஸ்ட் எம்பிக்கள் செல்வராஜ், சுப்புராயன்; மதிமுக எம்பி துரை வைகோ; முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்பி சுதா கர்நாடகாவில் கட்சி கூட்டத்தில் இருப்பதால் வர முடியவில்லை என கூறியதாகவும் தகவல் வெளியானது.
தமிழகத்தில் லோக்சபாவில் 39, ராஜ்யசபாவில் 18 என மொத்தம் 57 எம்பிக்கள் உள்ளனர். இதில் திமுக 30 எம்பிக்கள், அதிமுக 4 எம்பிக்கள் உள்ளிட்ட மொத்தம் 37 எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக செய்தி தெரிவிக்கிறது; பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் தலா ஒருவரும் பங்கேற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.





