லக்னோ: அயோத்தி ராமர் கோவிலுக்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடை நிதியில் எந்த முறைகேடும் இல்லை என வெளித் தணிக்கை ஆய்வில் உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில் உண்டியல் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் பெருமளவில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்தன. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
மேலும் உத்தர பிரதேச அரசு நியமித்த மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு கோவில் வளாகத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும், இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மொத்த பங்களிப்பு தொகையான ரூ.3,300 கோடி முழுமையாக வெளித் தணிக்கை நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்டு, கணக்குகள் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். கோவில் கட்டுமானத்திற்காக ரூ.1,800 கோடி மற்றும் நிலம் கையகப்படுத்த ரூ.400 கோடி செலவிடப்பட்டதும் முழுவதும் வங்கி பரிவர்த்தனைகள் மூலமே நடந்ததாகவும், ரொக்கப் பரிவர்த்தனைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
அறக்கட்டளையின் கணக்குகளில் ஊழல் அல்லது கணக்கியல் முறைகேடு இல்லை; உண்டியல் காணிக்கைகளை கைமுறையாக எண்ணும் மையத்தில் நடந்த பணத் திருட்டே சம்பவத்தின் மையம் என தணிக்கை முடிவு கூறுகிறது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காத வகையில் கோவில் நிர்வாகம் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.





