புதுடில்லி: நீட் இளநிலை தேர்வின் வினாத்தாள் கசிவு, தேர்வை நடத்தும் அமைப்பின் பணியில் இருந்த நிபுணர்களால் நடந்ததாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவுகள் மற்றும் பொது தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லியை தலைமையகமாக கொண்ட தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மே 3 அன்று நீட்-யு.ஜி. தேர்வை நடத்தியது; இதில் சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மே 3 தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.

94 பக்க குற்றப்பத்திரிகை விவரிப்பதன்படி, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களுக்கு தனித்தனியாக நிபுணர்கள் மூலம் வினாத்தாள் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு பணிகள் ஏப்ரலில் தெற்கு டில்லி ஓக்லாவில் உள்ள என்.டி.ஏ. ரகசிய பிரிவில் நடைபெற்றன. மொழிபெயர்ப்பில் குறிப்பெடுக்க வெற்று காகிதங்கள் வழங்கப்பட்டதை பயன்படுத்தி கேள்வி-விடைகளை எழுதி வெளியே எடுத்துச் சென்றதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது.

வேதியியல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட பேராசிரியர் ஒருவர் 135 கேள்விகளும் விடைகளும் எழுதிக் கொண்டு மறைவாக எடுத்துச் சென்றதாகவும், தாவரவியல் மற்றும் விலங்கியல் கேள்விகளை மராத்தியில் மொழிபெயர்த்த நிபுணர் பணிமுடிந்து அறைக்கு திரும்பியதும் என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் தொடர்புடைய பகுதிகளை குறித்துக் கொண்டதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இயற்பியல் மொழிபெயர்ப்பில் இருந்த நிபுணரும் பாதுகாப்பு வளாகத்திற்கு வெளியே கேள்வி குறிப்புகளை தனியாக பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகசிய பிரிவில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா இல்லாததும், உள்ளே நுழையும்போதும் வெளியேறும்போதும் சோதனை நடைமுறை இல்லாததும் போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் கசிவுக்கு வழிவகுத்ததாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இடைத்தரகர்கள் மூலம் கேள்விகள் பயிற்சி மையங்களுக்கு சென்றதாகவும், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு ரூ.12 லட்சம் வரை பணம் கைமாறியதாகவும் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பேராசிரியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகள் மற்றும் மொபைல் போன்கள் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில் முறைகேடு உறுதி ஆனதாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.