சென்னை: காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெங்களூரு செல்லும் எண்ணத்தைத் தான் முன்வைத்து முயற்சி எடுத்ததாகவும், அதனால் தனக்கு அவமானம் நேர்ந்தாலும் தமிழக மக்களுக்காக அதைத் தாங்கத் தயாராக இருப்பதாகவும் முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபை விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, காவிரி பிரச்னையில் கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தும் நிலையில் தமிழக அரசு அதைப் தவிர்ப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், பெங்களூரு பயணம் குறித்து வெளியான தகவல்கள், பின்னர் மறுப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். பயிர்க் கடன் தள்ளுபடி வாக்குறுதி, அதற்கான விவசாயிகள் போராட்டம், டெல்டாவில் குறுவை சாகுபடி பரப்பு குறைவு மற்றும் குறுவை தொகுப்பு திட்டத்தின் பயனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடந்ததா என்பதையும் அவர் முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், காவிரி தமிழகத்திற்கு உயிர் ஆதாரமாகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாகவும் இருப்பதால் அதை அரசியலாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார். மேகதாது விவகாரத்தில் சட்டசபையில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியதையும், ராஜ்யசபாவில் ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக அனுமதி வழங்கக்கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் நினைவூட்டினார்.

மேகதாது தொடர்பாக தமிழகத்தின் உரிமையை அரசு சிறிதும் விட்டுக்கொடுக்காது என்றும், காவிரி விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார். சட்டப்படி உறுதியாக அணுகும் நிலைப்பாடு தொடரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சாதகமான அறிகுறி கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் பெங்களூரு சந்திப்பு முயற்சி உருவானதாக விளக்கினார்.

இன்றைய காலத்தில் பகை நாடுகளே பிரச்னைகளை பேசி தீர்க்க முயல்கின்றன; அப்படியிருக்க பக்கத்து மாநிலத்துடன் பேசிப் பார்க்கலாமே என்ற எண்ணத்தில் முயற்சி எடுத்ததாகவும், அதில் அவமானம் நேர்ந்தாலும் தமிழக மக்களுக்காக அதைத் தாங்கத் தயாராக இருப்பதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.