ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. பல நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசைத் தாண்டி, அன்றாட வாழ்க்கையையும் முக்கிய சேவைகளையும் பாதித்துள்ளது.

இந்த கடும் வெப்பம் காரணமாக சுகாதார சேவைகள், மின் உற்பத்தி, போக்குவரத்து வலையமைப்பு மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியில், தேசிய வெப்ப கண்காணிப்பு அமைப்பின் கீழ் உள்ள 27 முக்கிய நகரங்களும் நடப்பாண்டில் முதன்முறையாக ஒரே நேரத்தில் ‘சிவப்பு எச்சரிக்கை’ நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரோமில் மக்களுக்கு உதவ நகர்ப்புற கடற்கரை அமைக்கப்பட்டதுடன், மிஸ்ட் விசிறிகளும் நிறுவப்பட்டுள்ளன.

ஆஸ்திரியாவில் 41.2 டிகிரி செல்ஷியசும், ஸ்லோவாக்கியாவில் 42.2 டிகிரி செல்ஷியசும் பதிவாகி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டதாக கூறப்படுகிறது. கடும் வறட்சியால் டான்யூப் நதியின் நீர்மட்டம் குறைந்ததால், நீர்மின் மற்றும் அணுமின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நதிகளின் நீர்மட்டம் குறைந்ததால் நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பால்கன் நாடுகளில் காட்டுத்தீ பரவி வருவதால், தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.