சென்னை: திருக்கோவில்களில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட விஐபிகள் வருகையின்போது, கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கும் காணொளி பதிவு செய்வதற்கும் எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
அனைத்து கோவில்களிலும் இந்த நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் வினய் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார். பிரபலங்கள் அல்லது முக்கிய நபர்கள் தரிசனத்திற்கு வருவதாக தெரிந்தால், குறைந்தது ஒரு நாள் முன்பாக அல்லது தகவல் கிடைத்த உடனே, வரவிருக்கும் கோவில், வருகை நேரம், உடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அத்தகைய வருகைகளின் போது பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்களின் நுழைவு மற்றும் இயக்கத்தை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், கோவிலின் புனிதத் தன்மையும் மரபுசார்ந்த ஒழுங்கும் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு, நிர்வாகத் தேவைக்காக அவசியமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள்/முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை அனைத்து செயல் அலுவலர்களும் விதிவிலக்கு இன்றி கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீசார் கோவில்களுக்கு வரும்போது பெரிய கூட்டமாக வருவது, வரிசையில் காத்திருக்காமல் அல்லது டிக்கெட் எடுக்காமல் உள்ளே செல்லுவது போன்ற புகார்கள் உள்ளதாகவும், அவர்களுக்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.





