புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களை நில அளவைத் துறை (Survey of India) அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அடையாளம் கண்டு பதிவு செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சீனா தனது வரைபடங்களில் அருணாச்சலப் பிரதேசத்தை “ஜாங்னான்” என குறிப்பிடுவதோடு, மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு புதிய பெயர்களை அறிவித்து பட்டியல்களையும் வெளியிட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக, முக்கிய இடங்கள் மற்றும் புவியியல் அம்சங்களை அவற்றின் அதிகாரப்பூர்வ இந்தியப் பெயர்களுடன் இந்தியா தனது அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களில் முறையாக பதிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை வழக்கமான தூதரக கண்டனங்களைத் தாண்டி, இந்தியாவின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரைபடத்தில் லோங்பு (Longju) கிராமம் உள்ளிட்ட போர் நினைவிடங்கள், கணவாய்கள், ஏரிகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.

அருணாச்சலப் பிரதேச இடங்களுக்கு சீனா பெயர் மாற்றம் செய்ததாகக் கூறி 2017ல் முதல் பட்டியலை வெளியிட்டது. பின்னர் 2021ல் இரண்டாவது பட்டியலும், 2023ல் மற்றொரு பட்டியலும் வெளியிடப்பட்டது. இத்தகைய மறுபெயரிடல் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து திட்டவட்டமாக நிராகரித்து, அவற்றை வீண் மற்றும் அபத்தமானவை எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த வரைபட நடவடிக்கை அருணாச்சலப் பிரதேச அரசுடன் ஆலோசித்து, இடங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதையும் பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.