மேற்காசியாவில் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ள புதிய கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை உறுதி செய்யாது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால், அது மற்ற இரு நாடுகளின் மீதான தாக்குதலாகவும் கருதப்படும் என கூறப்பட்டுள்ளது.
மெக்காவில் உள்ள அல் சபா அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதற்கு “மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்” என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது சர்வதேச கவனத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ஈரான் பார்லிமென்ட் உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி, அமெரிக்காவுக்கு பல ஆண்டுகள் ஒருதலைப்பட்ச ஆதரவு அளித்தும் பாதுகாப்பு கிடைக்காதது போல, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் செய்யப்பட்ட “வெறும் காகித ஒப்பந்தமும்” பாதுகாப்பை தராது என்பதை சவுதி உணர வேண்டும் என கூறினார். மேலும், பிறரிடம் பாதுகாப்புக்காக கெஞ்ச வேண்டாத வகையில் தங்கள் கொள்கைகளை சீரமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





