சென்னையில் தந்தையுடன் ஜனநாயகன் திரைப்படம் பார்த்த 8 வயது சிறுமி, படத்தில் இடம்பெற்ற ‘பேட் டச்’ விழிப்புணர்வு காட்சியை பார்த்த பின்னர், தன்னிடம் நடந்த பாலியல் அத்துமீறலை தைரியமாக தந்தையிடம் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கே.கே.நகரைச் சேர்ந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், 11 வயது மகன் மற்றும் 8 வயது மகள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குழந்தைகளை அவ்வப்போது சந்திக்கும் தாய், தாம் வீட்டு வேலை செய்யும் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டிற்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வசிக்கும் நபரால் சிறுமிக்கு பாலியல் அத்துமீறல் நடந்ததாக, திரைப்படம் பார்த்த பின்னர் சிறுமி தந்தையிடம் கூறியதாக போலீஸ் கூறுகிறது.

இதையடுத்து தந்தை வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் சம்பவம் உறுதியானதைத் தொடர்ந்து, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியன் (50) மீது குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.