டெஹ்ரான்: ஈரான் ஆட்சியாளரான மதகுரு மொஜ்தபா கமேனி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி, அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலின்போது அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, மொஜ்தபா கமேனி ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார் என அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. அதன் பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றாததால், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவத் தொடங்கின.
கமேனியின் அறிக்கைகள் மற்றும் அவர் தெரிவிப்பதாக கூறப்படும் செய்திகள் ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டு வந்தாலும், நேரடியாக ஊடகங்களில் தோன்றாதது சந்தேகங்களை அதிகரித்தது. அண்மையில் ஈரானுக்கான ரஷ்ய தூதர் அலெக்சி டெடொவ், கமேனி ஈரானிலேயே இருப்பதாகவும், சில காரணங்களால் பொது நிகழ்வுகளை தவிர்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சேனல் 14, ஈரான்வயர் (IranWire) உள்ளிட்ட ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், அதிபர் பெசேஷ்கியன் நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையும் இதேபோன்ற செய்திகளை வெளியிட்டுள்ளது.
பெசேஷ்கியனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக வெளியான தகவலின்படி, இதுவரை எந்த அமைச்சரவை உறுப்பினர்களும் கமேனியை சந்திக்கவில்லை என்றும், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரது மரணம் குறித்த செய்தி வந்தால்கூட ஆச்சரியப்பட மாட்டோம் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.





