புதுடில்லி: பெரும் சவால்களைக் கண்டு அஞ்சாமல், தீர்வுகளைத் தேடத் துணிவுடன் இருக்க வேண்டும் என்று இளம் தலைமுறையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
ஐஐடி டெல்லியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்கினார். இது திறமைமிக்க இளைஞர்களின் வாழ்க்கையில் புதிய பயணத்தின் தொடக்கம் என்றும், நாட்டுக்காக சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் அவர்கள் முன்னேறுவதைப் பார்ப்பதில் பெருமை எனவும் அவர் கூறினார்.
ஒவ்வொருவரின் பாதையும் கனவும் தனித்துவமானது என்று குறிப்பிட்ட அவர், குடும்பத்தினர் பெருமிதம் கொள்வதைப் போலவே தானும் மாணவர்களைப் பற்றி பெருமை கொள்கிறேன் என்றார். பட்டம் பெறுவது மட்டுமல்ல; நாட்டிற்காக அர்த்தமுள்ள பணிகளைச் செய்யும் இலட்சியத்துடன் அவர்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் வேகமாக மாறும் சூழலில் தொழில்நுட்பம், தொழில்துறைகள், வேலைமுறைகள் அனைத்தும் மாற்றமடையும்; ஆனால் தொடர்ந்து கற்றுக்கொள்பவர்களே வெற்றி பெறுவார்கள் என்று மோடி கூறினார். அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பதை இன்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதால், வாழ்க்கையில் ஆர்வத்தையும் கற்றல் மனப்பாங்கையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், போதுமான சிந்தனையோ புரிதலோ இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துகளையும் நடைமுறைகளையும் மாணவர்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும், பெரிய சவால்களுக்கு அஞ்சாமல் தீர்வுகளை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் அவர் மீண்டும் கூறினார்.





