சென்னை: TNUSRB நடத்தும் உதவி ஆய்வாளர் (SI) ஆட்சேர்ப்பில், தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்களுக்கு PSTM (தமிழ் வழி படித்தோர்) முன்னுரிமை உறுதி செய்ய வேண்டும் என்று ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில் 2010-ல் சட்டம் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிட்டார். அந்தச் சட்டத்தின் அடிப்படையில், TNPSC மூலம் Group-I போன்ற உயர்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் அரசு ஊழியர்களும் இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடிகிறது என்றும் தெரிவித்தார்.
ஆனால், TNUSRB மூலம் நடைபெறும் SI நியமனங்களில், காவல்துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் 20% துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும் தமிழ் வழி படித்த காவலர்களுக்கு PSTM முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். SI ஆட்சேர்ப்பு நேரடி நியமனமாக நடைபெறுவதால், துறை ஒதுக்கீட்டில் போட்டியிடுவோருக்கும் PSTM வழங்கப்படாதது முரண்பாடாக இருப்பதாக கூறினார்.
கடந்த ஆண்டு TNUSRB அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் நடைபெற்ற 1,352 SI பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பில், துறை ஒதுக்கீட்டில் போட்டியிட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு ‘ஏற்கனவே அரசு ஊழியர்கள்’ என்ற காரணத்தால் PSTM வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். ஆனால், PSTM சட்டத்தில் அரசு ஊழியர்களை விலக்க வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
இந்த முரண்பாட்டை நீக்க, கடந்த ஜனவரி 23-ல் ‘Tamil Nadu Bill No.4 of 2026’ என்ற திருத்த மசோதாவை அரசு சட்டசபையில் தாக்கல் செய்ததாகவும், அதில் தமிழ் வழி படித்த அரசு ஊழியர்களுக்கும் உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் PSTM வழங்குவதே நோக்கம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மசோதா இன்னும் சட்டமாகாததால் பாதிக்கப்பட்ட காவலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28-ல் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். மசோதாவுக்கு அரசு உடனடி முடிவு எடுத்து, தமிழ் வழி படித்த காவலர்களுக்கு உரிய முன்னுரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.





