காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் இன்ஸ்டாகிராமில் கேள்விகளை அனுப்புமாறு அழைப்பு விடுத்து, முடிந்தவரை பல கேள்விகளுக்கு பதிலளிப்பதாக தெரிவித்தார்.
அந்த கலந்துரையாடலில், பா.ஜ.வில் தமக்குப் பிடித்த அரசியல்வாதி யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ராகுல், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் பெயரை குறிப்பிட்டார். இந்த கருத்து பஞ்சாப் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியது.
அமரிந்தர் சிங்குடன் தமக்கு நல்ல பழக்கம் இருப்பதாகவும், அவர் “அருமையான மனிதர்” என்றும் ராகுல் கூறினார். மேலும் அவர் ராணுவ வரலாற்றில் வல்லுநர் என குறிப்பிட்டு, அவரை அன்புடன் வாழ்த்தியும் பேசினார்.
அமரிந்தர் சிங், காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்தவர். 2017 பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை பெரிய வெற்றிக்கு வழிநடத்தி, இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் பஞ்சாப் காங்கிரஸுக்குள் நீடித்த கோஷ்டிப் பூசல்கள் காரணமாக கட்சித் தலைமையுடன் அவரது உறவு பாதிக்கப்பட்டது.
2021ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், பின்னர் காங்கிரஸிலிருந்தும் விலகி ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ கட்சியை தொடங்கினார். 2022 சட்டசபை தேர்தலில் அந்தக் கட்சி ஒரு இடத்தையும் வெல்லவில்லை. அதன் பின்னர் அந்தக் கட்சியை பா.ஜ.வுடன் இணைத்தார். அவரது மனைவி பிரீனீத் கவுர், மகன் ரனிந்தர் சிங், மகள் ஜெய் இந்தர் கவுர் ஆகியோரும் தற்போது பா.ஜ.வில் இணைந்துள்ளனர்.





