கடன் திருப்பி வசூலிக்கும் முறையில் கடனாளிகளை அச்சுறுத்தவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இவை வங்கிகள் மட்டுமின்றி பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் வசூல் ஏஜென்ட்களுக்கும் பொருந்தும்; வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.

புதிய விதிகளின்படி, கடன் வழங்கும் நிறுவனங்களும் வசூல் ஏஜென்ட்களும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடனாளிகளை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நேரத்திற்கு வெளியே தொடர்பு கொள்ள வேண்டுமெனில் முன் அனுமதி அல்லது கடனாளியின் வேண்டுகோள் இருக்க வேண்டும். மருத்துவ அவசரம், திருமணம், துக்க நிகழ்வு போன்ற உணர்வுப்பூர்வமான நேரங்களில் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும் RBI அறிவுறுத்தியுள்ளது.

வசூல் நடவடிக்கைகளில் அநாகரிகமாக பேசுதல், மிரட்டுதல், மீண்டும் மீண்டும் அழைத்துத் தொந்தரவு செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவெளியில் அல்லது குடும்பத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்துதல், சொத்து அல்லது நற்பெயருக்கு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. கடனாளியை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதையும் RBI தடை செய்துள்ளது.

நேரில் சந்திக்கும் நடவடிக்கைகளில், ஒரு நாள் முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்; மேலும் எந்த வசூல் நிறுவனம் கையாளுகிறது என்பதையும் வங்கிகள் கடனாளிக்கு தெரிவிக்க வேண்டும். கடனாளி குறிப்பிடும் இடத்திலேயே சந்திக்க வேண்டும்; இடம் குறிப்பிடப்படாதது அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு வராமல் தொடர்ந்து தவிர்ப்பது போன்ற சூழலில் மட்டுமே வீடு அல்லது பணியிடத்திற்கு செல்லலாம். வசூலுக்கு செல்லும் நபர்கள் அடையாள அட்டை, அங்கீகார கடிதம், நோட்டீஸ் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்; அங்கீகார கடிதத்தில் வங்கியின் குறைதீர் அதிகாரி விவரங்களும் இடம்பெற வேண்டும்.

தொழில்நுட்ப வழி வசூல் நடவடிக்கைகளிலும் RBI கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லேப்டாப், கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்குவதற்காக எடுத்த கடன் நிலுவையில் இருந்தால் மட்டுமே அவற்றை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளலாம்; தனிநபர் கடன்களுக்கு இத்தகைய நடவடிக்கை அனுமதியில்லை. இஎம்ஐ தவறிய உடனே ரிமோட் மூலம் கட்டுப்படுத்தக் கூடாது; குறைந்தது 30 நாட்களுக்கு பிறகே தொடங்கலாம், 60 நாட்கள் நிலுவை இருந்தால் மட்டுமே முடக்கலாம். அப்போதும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், அவசர தொடர்புகள், வேலைக்குத் தேவையான அம்சங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர வேண்டும். புகைப்படங்கள், வீடியோக்கள், மொபைல் எண்கள், எஸ்எம்எஸ், அழைப்பு விவரங்கள், லொகேஷன் போன்றவற்றை அணுகுவதும் தடை. கடன் செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள் முடக்கம் நீக்கப்பட வேண்டும்; தாமதமானால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.250 இழப்பீடு வழங்கலாம். மேலும் அழைப்பு நேரம் உள்ளிட்ட விவரங்களை வங்கிகள் குறைந்தது ஆறு மாதங்கள் சேமித்து வைத்திருக்க வேண்டும்; வெளி நிறுவனங்களுக்கு பணியை ஒப்படைத்தாலும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு வங்கிகளே பொறுப்பு என RBI தெரிவித்துள்ளது.