சென்னை: மக்களுக்கு இடையூறாக உள்ள மது கடைகளை மூடவும் அல்லது இடமாற்றம் செய்யவும், அவற்றை அடையாளம் காணும் கணக்கெடுப்பு பணியை டாஸ்மாக் தொடங்கியுள்ளது.

2003 ஆம் ஆண்டு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் மது கடைகள் அமைக்கக் கூடாது; பிற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திற்குள் அமைக்கக் கூடாது. ஆனால் பல இடங்களில் விதிகளை முறையாக பின்பற்றாமல் கடைகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

வீடுகளுக்கு அருகிலும், மக்கள் அதிகம் கூடும் சந்திப்புகளிலும் உள்ள கடைகளை மூட வேண்டும் என பல தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, மே மாதத்தில் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் உள்ள 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார்.

அந்த கடைகள் ஜூன் மாதத்தில் மூடப்பட்டன. இருப்பினும், தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகிலுள்ள சில மது கடைகள் இன்னும் மூடப்படவில்லை என பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, மக்களுக்கு தொந்தரவு தரும் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான விவரங்களைத் திரட்டும் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கணக்கெடுப்பு முடிந்ததும், தகவல்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு, அடையாளம் காணப்படும் கடைகள் மூடப்பட உள்ளன.