வாஷிங்டன்: குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கச் செய்வதற்காக அமெரிக்காவுக்கு சென்று அங்கு பிரசவம் செய்வது தொடர்பான ‘பிரசவ சுற்றுலா’ நடைமுறையை கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலானோருக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்படும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள சிலர் சுற்றுலா விசாவில் சென்று அங்கு குழந்தை பெற்றெடுப்பதாக கூறப்படுகிறது.

இதனை மாற்றும் நோக்கில் டிரம்ப் முன்பும் நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். ஆனால் ஜூன் 30 அன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, நீண்டகால நடைமுறையை மீண்டும் உறுதி செய்தது.

இந்நிலையில் வெளியான புதிய உத்தரவுகளின்படி, குழந்தை பெற்றெடுப்பதற்காக வணிக ஏற்பாடுகள் மூலம் அமெரிக்காவுக்கு வருவோருக்கு நுழைவு மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படக் கூடாதவர்கள் என்ற பட்டியலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது; அதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தோரின் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டு அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை குறித்து உச்ச நீதிமன்றம் “மிகவும் வருத்தமளிக்கும்” தீர்ப்பை வழங்கியதாக கூறினார். 1868ல் உள்நாட்டுப் போருக்குப் பின் அடிமைகளின் குழந்தைகளுக்காக 14வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது அதை சிலர் வணிக முறையில் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.