சட்டசபையில் தனி அணியாக செயல்படும் வகையில், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று, அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களிடம் தவெக மேலிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக அரசு பொறுப்பேற்றபின் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் தவெகக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அதிருப்தியாளர்கள், இதுவரை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் (இபிஎஸ்) சமரசமாகவில்லை என கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சண்முகம், விஸ்வநாதன், அன்பழகன் உள்ளிட்டோர் தனி அணியாக தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிருப்தி அணியினர் தரப்பில் கூறப்படுவதாவது: தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் அமைச்சர் பதவிகள் மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் மற்றும் தவெக தரப்பில் உறுதி அளித்ததாகவும், ஆனால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றபின் வாக்குறுதிப்படி நடக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், தங்கள் தரப்பிலிருந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் தவெக பக்கம் சென்றதால் தங்கள் அணி பலவீனமடைந்ததாகவும், எம்.எல்.ஏ. பதவியை காப்பாற்ற இபிஎஸ்க்கு கடிதம் அளித்ததாகவும் கூறுகின்றனர்.
மேலும், தவெக கூட்டணிக்குள் பிரச்னைகள் வெடித்துள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். கடந்த மே மாத நம்பிக்கை ஓட்டெடுப்புக்குப் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியும்; அதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகளும் கொண்டு வரலாம் என்ற சூழலை சுட்டிக்காட்டி அழுத்தம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பின்னணியில், கட்சி தாவல் தடை சட்டம் பாயாத அளவுக்கு எம்.எல்.ஏ.க்கள் அணியை உருவாக்கி பலத்தை உயர்த்த வேண்டும்; பலம் வந்தால் கட்சியையும் கைப்பற்ற முடியும்; ஆளும் அரசாக தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தவெக மேலிடம் கூறியதாக அதிருப்தி அணியினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, வேலுமணி தரப்பினர் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.





