புதுடில்லி: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்களில் கணக்கு தொடங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் தனிநபர் மசோதாவை பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக பயன்பாடு குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக இதுகுறித்து விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த மசோதாவை பாஜ எம்.பி. பைஜயந்த் பாண்டா முன்மொழிந்துள்ளார். பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்படவிருந்த இரண்டு தனிநபர் மசோதாக்களில் இதுவும் ஒன்றாக இருந்த நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டதால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மசோதா முன்மொழிவின்படி, 13 வயதுக்குட்பட்டோர் பெற்றோர் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் ஆப்களில் கணக்குகளை உருவாக்க முடியாத வகையில் தடை விதிக்கப்படும். தனிநபர் மசோதாக்கள் அரிதாகவே சட்டமாகும் என்றாலும் (இதுவரை 12 மட்டுமே நிறைவேற்றம்), கட்சி வேறுபாடு இன்றி பல எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மசோதா சட்டமாகினால் விதிமீறும் சமூக வலைதளங்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் அல்லது வேண்டுமென்றே மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69Aன் கீழ் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தவும் அல்லது முடக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





