புதுடில்லி: லோக்சபாவில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் எழுந்த குழப்பங்களுக்கு இடையில், யுபிஐ பரிவர்த்தனைகள் பயனர்களுக்கு தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்று பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா (PCI) தெளிவுபடுத்தியுள்ளது.
வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026 லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மின்னணு பரிவர்த்தனை முறைகளில் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இதில் ஏற்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பல்வேறு யூகங்கள் பரவின.
சில பதிவுகளில் யுபிஐ பரிமாற்றங்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த PCI, பொருந்தும் இடங்களில் “வணிகர் சேவைக் கட்டணம்” என்பது வணிகர்களும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களும் இடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமையும் என தெரிவித்தது.
அதனால் நுகர்வோர் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதல்ல என்றும் PCI விளக்கியது. மேலும் சிறிய கடை உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரியமாக குடும்பத்தினர் நடத்தும் பலசரக்கு கடைகள் போன்ற சிறு வணிகங்கள் இத்தகைய கட்டணங்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்; இதன் மூலம் நாடு முழுவதும் சிறு வணிகங்களுக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றம் எளிதாக கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.





