ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை குறிவைத்து, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் 86–11 என்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா முழுமையாகச் சட்டமாக மாற, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலும் அதிபரின் கையெழுத்தும் அவசியம். ஆகஸ்ட் 31 அன்று பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும் போது, ஒப்புதலுக்காக இது அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 100% வரை வரி விதிக்க அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதா அல்லது அமெரிக்கச் சந்தையில் வர்த்தகத்தைத் தொடர்வதா என்பதை அந்த நாடுகள் தேர்வு செய்ய வேண்டும் என அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மசோதாவுக்கு “லின்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகள் சட்டம் 2026” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் போருக்கான நிதியுதவிக்கு வழிவகுக்கும் வகையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தண்டிக்கும் நோக்கில் இது கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிபர் புடின் உள்ளிட்ட ரஷ்யத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள், நிதி நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கவும் இது வழி வகுக்கும் என கூறப்படுகிறது. இதனுடன், 1996 ஆம் ஆண்டின் ஈரான் மீதான தடைகள் சட்டத்தை 2031 வரை நீட்டித்து, ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்குகிறது.