தாய்லாந்தின் புகெத் நகரில் இருந்து டில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், ஆக.4 அன்று நடுவானில் திடீரென குலுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
சில விநாடிகளில் விமானம் சுமார் 300 அடி உயரத்தை இழந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத இந்த தடுமாற்றத்தால் விமானத்திற்குள் இருந்த சிலர் தடுமாறி விழுந்தனர்.
இந்த சம்பவத்தில் பணிப்பெண்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து டிஜிசிஏ (DGCA) விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் டில்லியில் பாதுகாப்பாக தரையிறங்கிய பின், வழக்கமான நடைமுறைகளின்படி விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அந்த விமானத்தின் பைலட் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக விமான போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு ஏர் இந்தியா தரப்பில் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கப்பட்டுள்ளது. பிந்தைய பரிசோதனை நடந்தது உண்மைதான்; ஆனால் அதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் நிறுவனத்துடன் பகிரப்படாததால் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்துள்ளது.





