CSIR–மருத்துவம் மற்றும் நறுமணப் பயிர்கள் மத்திய நிறுவனம் (CSIR-CIMAP) சார்பில் வேளாண் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் டாக்டர் அகன்ஷா சிங் (39), ஒரே ஆண்டில் மூன்று தேசிய அளவிலான அங்கீகாரங்களைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளார்.

தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் உற்பத்தி பிரிவுகளில் ஆராய்ச்சி செய்து வருகிறார். வேளாண் அறிவியல் மற்றும் நிலையான பயிர் ஆராய்ச்சியில் அவர் வழங்கும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக கூறப்படுகிறது.

2026ஆம் ஆண்டுக்கான ‘இளம் விஞ்ஞானி’ விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது, 2026 டிசம்பரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் வழங்கப்பட உள்ளது.

இது 2026ல் அவர் பெறும் மூன்றாவது தேசிய அங்கீகாரம். இதற்கு முன், இந்திய தேசிய இளம் அறிவியல் கழகம் (INYAS) உறுப்பினராகவும், இந்திய தேசிய அறிவியல் கழகம் (INSA) இளம் இணை உறுப்பினராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.