தமிழகத்தில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் நோக்கில், ஆந்திரப் பிரதேச அரசு சென்னை மற்றும் கோவையில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, சென்னை நகரில் ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், கோவையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதியும் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க தமிழக நிறுவனங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த ஆந்திரா நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசின் அதிகாரிகள் சில தொழில் நிறுவனங்களை தொடர்பு கொண்டு ரகசியமாக கேட்டதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆந்திரா முதலீடுகளை ஈர்க்க குறைந்த விலையில் நிலம், மின்சார வரி விலக்கு, முத்திரைத் தாள் மற்றும் பத்திரப் பதிவு கட்டண விலக்கு, மூலதன மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாகவும் அவர்கள் கூறினர்.
தமிழகமும் இதேபோன்ற சலுகைகளை வழங்கினால், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களை ஆந்திரா ஈர்க்க முடியாது என்றும் தொழில்துறையினர் கருத்து தெரிவித்தனர்.




