புதுடில்லி: மெட்டா நிறுவனம் இந்திய சட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இந்தியா வந்துள்ள மெட்டா நிறுவன அதிகாரிகள், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரிகளை பல முறை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மெட்டாவின் உள்ளடக்கக் கொள்கைகள் மற்றும் அமலாக்க வழிமுறைகள் இந்திய சட்டங்களுக்கு இணங்குகிறதா என்பதை உறுதி செய்வதே இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் என அரசு தரப்பு தெரிவித்தது.

வெறும் உறுதிமொழிகள் போதாது; நடைமுறை மாற்றங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும் வெளிநாட்டு குழுக்களுக்கு இந்திய கலாசார நுணுக்கங்களை முழுமையாகப் புரிந்து கொள்வது சிரமம் என்பதால், இந்திய மொழிகள் மற்றும் கலாசாரப் புரிதல் கொண்ட நபர்கள் மூலம் உள்ளடக்க மதிப்பீட்டை மேம்படுத்த மெட்டா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான உள்ளடக்கங்களில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை; இப்படியான உள்ளடக்கங்கள் மெட்டா தளங்களில் நீடிப்பது கடுமையான விதிமீறலாகும் என்றும், வாக்குறுதிகளை விட உறுதியான நடவடிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசு தெரிவித்தது.

அதே நேரத்தில், மெட்டாவின் அல்காரிதத்தை முழுமையாக புதுப்பிக்க அரசு உத்தரவிட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்று அதிகாரிகள் மறுத்தனர்.